Header Ads

விடியாத இருளொன்று...




இப்போதெல்லாம் காற்று கூட அவள் பக்கம் மட்டும் வீசாதிருப்பதாய் தோன்ற தொடங்கியிருக்கிறது அவளுக்கு..

பாதைகளை நோக்கி நீண்ட விழிகள் இரண்டும் இமைக்க மறந்து சோர்ந்து போயிருப்பதாக உணர ஆரம்பித்திருக்கிறாள்...

மஞ்சளும் குங்குமமும் வெறும் நிறங்களாய் மட்டும் தெரிய ஆரம்பித்திருக்கின்றன,

இப்போதெல்லாம் சிரிப்பது கூட இன்னொரு வேலையாய் இருப்பதாய் சொல்லிக் கொண்டிருக்கிறாள்...,

அவள் நாட்குறிப்புகள் அனைத்தும் கண்ணீர் துளியால் நிரம்பியே கரைந்து போயிருந்தது..

கெஞ்சல்களின் பேரில் விட்டுப் போயிருந்த சட்டை ஒன்றின் வாசம் மட்டுமே அவள் உயிரோடிருப்பதற்கான ஆதாரமாய் இருந்து கொண்டிருக்கிறது...

துப்பாக்கி துடைத்த துணிகளும், தோட்டாக்கள் தேக்கி வைத்திருந்த அலுமாரியும் போர்க்களத்தினை திரையிட்டு காட்டிக் கொண்டிருந்தது..

ஒவ்வொரு வெடிச்சத்தமும்,

ஒவ்வொரு ஒலி பரப்பிலும்,

அவள் இன்னோர் உயிர் பலியிடப்பட்டிருக்க கூடாது என அவள் என்றைக்கோ மறந்திருந்த கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறாள்...




இப்படியாக  ஐன்னல்களை ஆதாரமாய் கொண்டு ஏக்கங்களுடன் இன்னும் பல அவள்களும்

போர்க்களத்தில் துப்பாக்கியிலும் அதிகமாய்  கனவுகளை சுமந்தபடி அவன்களும்,

விடியப்போகாத விடியல் ஒன்றுக்காய்
காத்திருக்கிறார்கள்...

காத்துக்கொண்டிருப்பார்கள்..

- Banusha Aruchunarasa -
Department of Transport and Logistics Management
Faculty of Engineering



No comments